வெள்ள அபாய மட்டத்தில் உள்ள ஆறுகள்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் பல ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் வௌ்ள அபாய மட்டத்திலேயே காணப்படுவதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கை மில்லகந்த பகுதியில் வௌ்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், கிங் கங்கையின் தவளம பகுதி, நில்வளா கங்கையின் தல்கஹகொட, பானதுகம மற்றும் அத்தனகலு ஓயாவின் தூணமலை பகுதியிலும் நீர் மட்டம் வௌ்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
இதனிடையே தப்போவ, உடவலவ, தெதுறு ஓயா உட்பட 6 பிரதான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்வதாகவும் பலத்த மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 10 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நிலவும் பலத்த மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 11,949 குடும்பங்களைச் சேர்ந்த 44,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 2335 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் 21 வீடுகள் முழுமையாகவும் 4472 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழைக் காரணமாக தற்போது நிலவும் பலத்த மழை மற்றும் காற்றுடனான வானிலை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |