வாக்குப்பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டால் கனடா மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கும் அபாயம்
கனடா நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தொற்று நோய்க்கு மத்தியில் வாக்குப்பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டால் கனடா மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, வாக்குப் பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டால் அது கன்சர்வேடிவ் கட்சிக்குச் சாதகமாக அமையும் எனவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறைந்த வாக்குப்பதிவு வரலாற்று ரீதியாகப் பழமை வாதிகளுக்குச் சாதகமாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கள் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும் எரின் ஓ டூல் தலைமையிலான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையில் கடும் நெருக்கமான போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நனோஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளின் பிரகாரம் லிபரல் கட்சி 31.9% ஆதரவைப் பெற்று மிகச் சிறிய முன்னிலை வகிக்கிறது. அதேவேளை, கனசர்வேடிவ் கட்சி 30.4% ஆதரவைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், என்.டி.பி. 20.3% ஆதரவைப் பெற்றுள்ளது.
தொற்று நோய்க்கு மத்தியில் தேர்தலை முன்கூட்டியே அறிவித்தமை குறித்து எதிர்க் கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒன்ராறியோவின் வின்ட்சரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய லிபரல் கட்சித் தலைவர் ட்ரூடோ, தொற்று நோய்க்கு மத்தியில் தேர்தலை நடத்துவது சிறந்ததல்ல என ஒப்புக்கொண்டார்.
ஆனால் எந்தவிதமான சந்தேகங்கள் இருந்தாலும் தவறாமல் வாக்களிக்குமாறு ஆதரவாளர்களை அவர் வலியுறுத்தினார். "சிலர் உணரும் விரக்தியை நான் புரிந்துகொள்கிறேன். எனினும் இது தேர்வு நேரம், இது முடிவெடுக்கும் நேரம், இது முன்னேறும் நேரம்" என்று ட்ரூடோ கூறினார்.
தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் தனது கட்சியே சிறந்த தேர்வாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
கனடாவில் சில பகுதிகளில் தொற்றுநோய் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இவ்வாறான நிலையில் குறைவான வாக்குச்சாவடிகள் மற்றும் சமூக இடைவெளி காரணமாக வாக்காளர்கள் தேர்தல் நாளில் வழக்கத்தை விட நீண்ட வரிகளை எதிர்கொள்ள நேரிடும் எனக் கருதப்படுகிறது.
இது வாக்களிப்பில் ஆர்வமற்ற தன்மையை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாற்றத்துக்காக வாக்களிக்குமாறு எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ டூல் பிரச்சாரம் செய்து வருகிறார். கன்சர்வேடிவ் கட்சியைத் தவிர வேறு எதற்கும் வாக்களித்தால் அது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வாக்களிப்பதற்கு ஒப்பானது எனவும் ஓ'டூல் கூறினார்.