மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3ம் உலகப் போர் வெடிக்கும் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் வெடிக்டோவ் எச்சரித்துள்ளார்.
கற்பனை உலகில் வாழும் உக்ரைன் தரப்பினர்கள்
கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு பதிலடியாக, நேட்டோவில் தங்களை மிகத் துரிதமாக இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் அனுப்பியது வெறும் பிரசார உத்தியாகும்.
மற்றபடி, உண்மையிலேயே நேட்டோவில் இணையும் எண்ணத்தில் அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டிருக்காது. காரணம், நேட்டோவில் தங்களை இணைத்துக் கொண்டால் அது 3ம் உலகப் போர் மூள்வதற்குக் காரணமாக இருக்கும் என்பது உக்ரைனுக்கு மிக நன்றாகவே தெரியும்.
இருந்தாலும், தங்கள் மீது பிறரது கவனத்தை ஈா்ப்பதற்காக நேட்டோவில் இணையவிருப்பதாக உக்ரைன் உரக்கக் கூறுகிறது. உண்மையில், தற்போது உக்ரைன் அரசில் அங்கம் வகிக்கும் பலர், நிதா்சனத்தை உணராமல் கற்பனை உலகில் வாழ்கின்றனர்.
உக்ரைனை இணைத்துக் கொள்வது தற்கொலைக்கு சமம்
அவா்கள் வேண்டுமானால் நேட்டோ தங்களை இணைத்துக்கொள்ளும் என்று நம்பலாம். உக்ரைன் போரில் பங்கேற்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வந்தாலும், ஆயுதங்கள் அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் மூலம் அந்த நாடுகள் இந்தப் போரில் மறைமுகமாக அங்கம் வகிக்கின்றன.
இந்த நிலையில், உக்ரைனை தங்களது அமைப்பில் அந்த நாடுகள் இணைத்துக்கொண்டால், நேட்டோ விதிமுறையின் 5வது பிரிவின் கீழ் ரஷ்யாவுடன் அவை நேரடியாக மோத வேண்டியிருக்கும்.
அத்தகைய ஒரு அழிவுப் பாதையை அந்த நாடுகள் தேர்ந்தெடுக்காது.
தங்களுடன் உக்ரைனை இணைத்துக் கொள்வது தற்கொலைக்கு சமம் என்பது நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் நன்றாகவே தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.