நெருக்கடியாக மாறும் அரச வருமானம்: திறைசேரி உண்டியல்கள் ஏலம்விடப்படும் அபாயம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இருந்து எதிர்பார்த்த வரி வருமானம் கிடைக்காமையால் அரச வருமானம் நெருக்கடியாக மாறும் அபாயம் காணப்படுவதாக நிதி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்க மற்றும் மதுவரி திணைக்களம் ஈட்ட வேண்டிய மொத்த வருமான இலக்கு 4,127 பில்லியன் ரூபாவாகும். அந்தத் தொகையிலிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஈட்ட வேண்டிய வருவாய் இலக்கு 2,024 பில்லியன் ரூபாவாகும்.
இதன்படி, இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான 9 மாதங்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஈட்ட வேண்டிய இலக்கு வருமானம் 1,518 பில்லியன் ரூபாவாகும்.
எனினும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அரசாங்கத்தின் நிதித் திணைக்களங்களுக்கு வழங்கிய ஆவணங்களில், முதல் ஒன்பது மாதங்களுக்கு 1,498 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான பற்றாக்குறை
எனினும், அந்த ஒன்பது மாதங்களில் திணைக்களம் 1,423 பில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ளது. 75 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023/24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி செலுத்தும் காலம் நேற்று முன்தினம் (30 ஆம் திகதி) முடிவடைந்துள்ளது.
குறித்த ஆண்டில் ஈட்டப்பட்ட வரி வருமானம் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகரவிடம் வினவியபோது, பெறப்பட்ட மொத்த வரித் தொகையை இன்று (02) பிற்பகல் 3 மணியளவில் அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி வருமானம் என்பது ஒரு தீவிரமான சூழ்நிலை அல்ல, கடினமாக உழைத்து தொடர்புடைய வரி வருவாயை அடைய முடியும். வரி செலுத்துவோரை வரி செலுத்துமாறு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வருட இறுதிக்குள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமான இலக்கான 2024 பில்லியன் ரூபாவை எட்டுவது நெருக்கடியாக இருக்கும் என நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரிகளை அதிகரிக்க வேண்டிய அபாயம்
இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அடுத்த தவணையை பெற்றுக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த இலக்கின் அடிப்படையில் எதிர்காலத்தில் வரிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையால் மேலும் திறைசேரி உண்டியல்கள் ஏலம் விடப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தகவல்களின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் திணைக்களத்தினால் வசூலிக்கப்பட வேண்டிய வரித் தொகை 1,066 பில்லியன் ரூபாவாகும்.
வரி செலுத்துவோர் சமர்ப்பித்த மேல்முறையீடுகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக வரி நிலுவைத் தொகை அதிகரித்துள்ளதாக மேற்படி திணைக்களம் குறிப்பிடுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |