சுகாதாரத்துறையில் ஆளனிப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறைக்கு மேலதிகமாக மனித வளப் பற்றாக்குறையும் நாட்டின் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
"மருந்து மாத்திரமல்ல, அதில் மனித வளம் மற்றும் ஆரோக்கியம் குறித்த பிரச்சினையும் உள்ளது. வைத்தியர்கள் மாத்திரமன்றி சுகாதாரத்துறையில் உள்ள பலரும் இதை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
" கடந்த கோவிட் தொற்றின் போது எதிர்கொண்டது போன்ற உயர் தொற்றுநோய் நிலைமை மீண்டும் இந்த நாட்டில் ஏற்பட்டால் அதனை நிர்வகிப்பது இலகுவானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் ஷமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றிய பெருமளவிலான வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறி வருவதாக கடந்த காலங்களில் ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருந்தன.
மருந்து தட்டுப்பாடு
நாட்டில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கடந்த 30 ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.அடுத்த இரண்டு வாரங்களில் தட்டுப்பாடு 70 ஆக குறையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 383 ஆகவும், உயிர் காக்கும் மருந்துகளின் எண்ணிக்கை 14 ஆகவும் காணப்படுகின்றது.
இலங்கை எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறைக்கு ஒரே காரணம் பொருளாதார நெருக்கடியோ பணப் பற்றாக்குறையோ அல்ல, அதிகாரிகளின் திறமையின்மை, கொள்முதல் நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்கள், மோசடி, ஊழல் ஆகியனவே என வைத்தியர் ஷமல் விஜேசிங்க சுட்டிக்காட்டடியுள்ளார்.
பிளாஸ்டர் தீர்வு
"நாட்டில் உள்ள மொத்தப் பணம், திறைசேரியில் உள்ள பணம் என அனைத்தையும் சுகாதார அமைச்சிடம் கொடுத்தாலும், வங்கிகளில் உள்ள மொத்த டொலர்களையும் சுகாதார அமைச்சுக்கு கொடுத்தாலும், மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு, இரண்டு வார காலத்திற்குள் தீர்வுகளை வழங்குவது இலகுவானதல்ல என சுட்டிக்காட்டியுள்ள ஷமல் விஜேசிங்க, குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இப்பிரச்சினையின் நோக்கத்தை சுகாதார அமைச்சு சரியாக புரிந்து கொள்ளவில்லை என
குற்றம் சுமத்திய வைத்தியர், சுகாதார அமைச்சு இன்னும் பிளாஸ்டர் தீர்வுகளை
(தற்காலிக) வழங்கி செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.