தனிமைப்படுத்தப்படும் வெளிநாட்டவர்கள்: இலங்கைக்குள் கொரோனா திரிபு வரும் ஆபத்து
அரசாங்கம், இரகசியமான முறையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரஜைகளை இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன (Kavinda Jayawardena) தெரிவித்துள்ளார்.
ஒருவரிடம் தலா 690 அமெரிக்க டொலர்களை அறவிட்டு, இந்த வெளிநாட்டினர் இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தலுக்காக அழைத்து வரப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் நீர்கொழும்பு நகரம் முழுவதும் நடந்து திரிக்கின்றனர். கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.
இவ்வாறு வெளிநாட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதன் ஊடாக டெல்டா பிளஸ் திரிபு நாட்டிற்குள் பரவக் கூடும்.
உள்நாட்டு மக்களை கேடயங்களாக மாற்றி, வெளிநாடுகளில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக நபர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்திய பின்னர், சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொழில்களுக்காக அனுப்பி வைக்கின்றனர்.
சவுதி போன்ற நாடுகள் வேறு நாடு ஒன்றில் தனிமைப்படுத்தப்படாத நபர்களை தமது நாடுகளுக்குள் அனுமதிப்பதில்லை. இதனால், இவர்கள் இலங்கையை தெரிவு செய்துள்ளனர்.
இலங்கை கொரோனா தனிமைப்படுத்தல் சர்வதேச நிலையமாக மாறியுள்ளது எனவும் காவிந்த ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.



