40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் விலைவாசி உயர்வு
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் மார்ச் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் பல ஆண்டுகளாகவே விலைவாசி உயர்வு விகிதம் மிக குறைவான அளவில் காணப்பட்டதுடன், கடந்த 2020 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் விலைவாசி உயர்வு விகிதம் 2% அளவில் காணப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க வட்டி விகிதத்தை 0.25% ஆக அமெரிக்க ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த பட்ஜெட் பற்றாக்குறைகளை அதிகரித்து அதன் மூலம் சுமார் 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நிதி தொகுப்புகளை டிரம்ப் மற்றும் பைடன் அரசுகள் செயல்படுத்தின. இதன் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் 6% வளர்ச்சியை எட்டியது.
இதனால் விலைவாசி உயர்வு விகிதம் 2021 செப்டம்பரில் 5.4% ஆகவும், 2022 ஜனவரியில் 7.5% ஆகவும், 2022 மார்ச்சில் 8.5% ஆகவும் உயர்ந்துள்ளது.
இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான சதவீதம் ஆகும். இதற்கிடையில் ஜோ பைடன் அரசின் தவறான கொள்கைகள் தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று குடியரசு கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.