உயரும் கச்சா எண்ணெய் விலை: டிரம்பிற்கு ஏற்படக்கூடிய நெருக்கடி
ஹார்முஸ் நீரிணை பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் பணவீக்கம் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பீட்டை விடக் குறைந்துள்ளதாகவும், அங்கு வாகன எரிபொருட்களின் விலை சற்று சரிந்து நுகர்வோருக்கு நிதியுதவி ரீதியாகச் சிறிய நிம்மதியை அளித்துள்ளதாகவும் இன்று காலைதான் செய்திகள் வெளியாகின.
ஆனால், இந்த நல்ல செய்திக்கு மத்தியில், ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அந்நாட்டுக் கப்பல்களை இலக்கு வைத்து, அமெரிக்கா மீண்டும் ஹார்முஸ் நீரிணையில் ராணுவ முற்றுகையை அமல்படுத்தத் திட்டமிட்டு வருவது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த ராணுவ முற்றுகை நடவடிக்கை, உலகளாவிய எரிசக்தி விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்குப் பல டாலர்கள் வரை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது. இதனால் விரைவில் நுகர்வோருக்கான எரிபொருள் விலையும் கணிசமாக உயரும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவில் விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பொதுவாக அமெரிக்க மக்கள் தங்களின் அன்றாடச் செலவுகள் மற்றும் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டே வாக்களிப்பார்கள். எரிபொருள் மற்றும் அன்றாடத் தேவைக்கான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால், அதற்கு ஆளும் அரசே பொறுப்பு எனக்கருதி, தற்போதைய அரசியல்வாதிகளைத் தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri