வடக்கில் அதிகரிக்கும் பெண் உயிர்ப்பலிகள்: நாம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்..!
அண்மைக் காலமாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள், கொலைகள் மற்றும் தற்கொலைச் சம்பவங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அதிகரித்து வருவது அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை வனிதா சேனாதிராஜா கொடூரமான முறையில் சடலமாக மீட்கப்பட்டமை, கிளிநொச்சி உருத்திரபுரத்தில் சைபர் குற்றங்களாலும் சமூக வலைத்தள அச்சுறுத்தல்களாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்தமை, நல்லூர் பகுதியில் பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் எனத் தொடரும் நிகழ்வுகள், எமது சமூகத்தின் பாதுகாப்புக் குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
இத்தகைய துயரச் சம்பவங்கள் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை அல்லது தற்செயல் நிகழ்வுகள் அல்ல. மாறாக, எமது சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தீவிரமான சீரழிவின் வெளிப்பாடாகும்.
வவுனியாவைச் சேர்ந்த 41 வயதான இளம் ஆசிரியையான வனிதா சேனாதிராஜா, ஒரு ஆங்கில ஆசிரியர் என்பதற்கு அப்பால், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினராகவும், கலை இலக்கிய துறை சார்ந்த படைப்பாளியாகவும், ஆர்வலராகவும், நடிப்பு துறையில் ஈடுபடுபவராகவும், தமிழ் தேசிய உணர்வு மிக்கவராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் வலம் வந்ததுடன், பலருக்கும் புத்திமதி கூறும் இரும்பு பெண்மணியாகவும் விளங்கினார்.
கைகளில் இருந்த வெட்டுக்காயங்கள்
இவர் கடந்த 22 ஆம் திகதி பொலனறுவை மின்னேரியா, கிரிதலைப் பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவரது கைகளில் வெட்டப்பட்டிருந்த காயங்கள், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட விதம், அவர் மீட்கப்பட்ட தங்குமிடம் என்பன அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தாரா அல்லது திட்மிட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது கொலைக்கு தூண்டப்பட்டாரா என்ற பல கேள்விகளை அவரது நண்பர்கள், உறவினர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் மின்னேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அவர் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் பெண் அல்ல என அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் கூறுகின்றார்கள். அப்படியாயின் அவருக்கு நடந்தது என்ன..?
அவர் இறந்து சில தினங்களில் அவரது மடிக்கணனி வவுனியாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளது. அப்படியாயின் அதை செய்தது யார்...? அது ஏன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்..? அதை எடுத்தவர்கள் யார்...? அந்த மடிக்கணனியில் இருந்தது என்ன...? அதற்கும் இந்த மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா..?
அவர் எழுதியதாக மீட்கப்பட்ட கடிதங்களின் உண்மைத் தன்மை என்ன..? என்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இது நீதியான விசாரணைகள் மூலமே வெளிப்படும். அதுவரை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
17 வயது சிறுமியின் விபரீத முடிவு
இந்த சோகம் மறைவதற்கு முன்பே கடந்த முதலாம் திகதி சிறுவர் தினத்தன்று கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வசித்து வந்த சமரழகி என்ற 17 வயது சிறுமி ஒருவர் இணைய வழி மிரட்டல் காரணமாக தான் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அதற்கு காரணமானவர் இவர் தான் என்றும் தனது அயல் வீட்டு இளைஞன் தொடர்பில் கடிதம் எழுதி வைத்து விட்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்துள்ளார்.
தனக்கு அந்த இளைஞனால் அச்சுறுத்தல் இருப்பதாக முன்னரே தனது தந்தையிடமும் சிறுமி கூறியுள்ளதாக தெரிய வருகிறது. குடும்ப கௌரவம் மற்றும் பிள்ளையின் எதிர்காலம் கருதி அந்த தந்தை மௌனமாக இருந்துள்ளார். ஆனால் இன்று நடந்தது வேறு...? அந்த சிறுமி ஒரு விபரித முடிவு எடுத்துள்ளார்..?

அந்த முடிவுக்கு காரணம் என சிறுமி எழுதிய கடிதம் இன்று அயல் வீட்டு இளைஞனை துரத்திக் கொண்டிருக்கின்றது. பொலிஸ் விசாரணை வலைக்குள் அந்த இளைஞன் உள்ளதுடன், சமூகத்தாலும் கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றார்.
அந்த இளைஞன் அவ்வாறு ஒரு செயற்பாட்டை செய்திருந்தால் அது தவறானதே. அதை செய்து அந்த இளைஞன் சாதித்தது என்ன..? இன்று தானும் சமூகததில் தலை காட்ட முடியாத நிலையில் உள்ளார்.
ஒவ்வொருவரும் தாம் செய்யும் செயற்பாடுகளை நன்கு யோசித்து நிதானமாக செய்ய வேண்டும். அதனால் வரும் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். அப்படி அந்த இளைஞன் சிந்தித்து இருந்தால்...?
பிரச்சனைகளுக்கு விபரீத முடிவு தான் தீர்வு என்னில் இந்த உலகத்தில் எவருமே வாழ முடியாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள தவறியதன் விளைவே அந்த விபரிதம் ஏற்படக் காரணம்.
யாழில் 33 வயது பெண்ணின் படுகொலை
இது இவ்வாறு இருக்கையில், யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின் தாயையும் கத்தியால் வெட்டி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ். நல்லூர் கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த ஒரு பிள்ளையின் தாயான பெண் மீது சரமாரியாக கத்தியால், வெட்டியதுடன், பெண்ணின் தலைமுடிகளையும் கத்தியால் அறுத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்தியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டதில், தாயார் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பி சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்ந்துள்ளான்.
குறித்த சம்பவத்தில், சமையல் கலைஞரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆன் லக்ஷா இக்னேஷியஸ் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே கொல்லப்பட்டுள்ளார்.
நிர்கதியாக்கப்பட்ட 11 வயது சிறுமி
அப்பெண்ணை படுகொலை செய்த பின்னர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்தவர் கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியை சேர்ந்த தேவதாஸ் புகழரசன் (வயது 23) என்ற இளைஞராவார்.
உயிரிழந்த பெண்ணின் கணவன் கடந்த 2021ஆம் ஆண்டு தனது உயிரை மாய்த்துள்ள நிலையில், தனது 11 வயது பெண் குழந்தையுடன் உயிரிழந்த பெண் வாழ்ந்து வந்தமை குறிப்பிடதக்கது.
அவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு...? கொலைக்கான காரணம் என்ன...? என பொலிசார் விசாரணைகளை முன்னெத்துள்ளனர். இந்த கொலையின் மூலம் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்து 11 வயது சிறுமி நிர்கதியாகியுள்ளார். அவரது எதிர்காலம்...? அவரது கனவு என்பவற்கு பதில் என்ன...?
சமூக சீரழிவுகள்
பகைமை, காழ்ப்புணர்ச்சி, தவறான உறவுகள் மற்றும் சமூகக் குற்றங்களால் பெண்கள் குறிவைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டிக்கத் தவறுவதும், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை உடனுக்குடன் கிடைக்காததும் இத்தகைய கொடூரங்களை மேலும் ஊக்குவிக்கின்றன. பெண்கள் வாழும் இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும், ஏன் வீதிகளிலும் கூட அச்சமின்றி நடமாட முடியாத சூழல் நிலவுவது நாகரிக சமூகத்திற்கு அழகல்ல.

டிஜிட்டல் அச்சுறுத்தல்களும், தற்கொலைகளும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், 'சைபர் கிரைம்' எனப்படும் இணையவழிக் குற்றங்கள் எமது சமூகத்திற்குப் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
இணைய வழியிலான அச்சுறுத்தல்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துதல், பிளாக்மெயில் செய்தல் போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்படும் பெண்கள், அதை வெளியே சொல்ல முடியாமலும் தீர்வு காண வழியின்றியும் தவறான முடிவை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.
இணையவழி அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு
இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளுக்குப் பயந்து உயிரை மாய்ப்பது தீர்வல்ல. சைபர் குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சிறப்புப் பொலிஸ் பிரிவுகளும், உதவி எண்களும் உள்ளன என்பதைப் பெண்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்.
மன உளைச்சலில் இருக்கும் பெண்களுக்குக் குடும்பத்தினரும் சமூகமும் துணையாக நிற்க வேண்டும். குற்ற உணர்ச்சியைத் திணிக்காமல், அவர்களுக்கு மனரீதியான ஆறுதலையும் தைரியத்தையும் தர வேண்டும். பெண்கள் தமது செயற்பாடுகள் தொடர்பில் நிதானமாக அணுக வேண்டும்.
தமது நெருங்கிய சகாக்களிடம அல்லது பொற்றோரிடம் ஒளிவு மறைவின்றி உண்மைகளை பேச வேண்டும். மன்ம் விட்டு பேசினால் நோய் விட்டு போகும் என்பது போல் அதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். பல சவால்கள எதிர் கொள்ளக் கூடிய வழிவகை கிடைக்கும்.
இதை ஒவ்வொரு பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்குச் சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும்.
பெண்கள் ஒரு சமூகத்தின் கண்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் துணையாக நிற்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். பெண்கள் அமைப்புக்களும் மௌனம் கலைக்க வேண்டும்.
வன்முறையற்ற, மன அச்சமற்ற பாதுகாப்பான சூழலை எமது தாய்மாருக்கும், மகள்களுக்கும், சகோதரிகளுக்கும் உருவாக்க நாம் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதுவே நாளைய விடியலுக்கான ஆரம்பம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 09 October, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.