பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு சடுதியாக உயர்வு! - உணவு விலைகளில் ஏற்பட போகும் பாரிய மாற்றம்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் நீடித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என உணவுத் துறையின் முன்னணி தலைவர் எச்சரித்துள்ளார்.
2 Sisters உணவு நிறுவனத்தின் தலைவர் ரொனால்ட் கெர்ஸ், இந்த ஆண்டு உணவு விலை 15 வீதம் வரை உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சிறந்த மாவு உற்பத்தி நிறுவனமான GR Wright & Sons, உக்ரைன் - ரஷ்யா மோதல் காரணமாக அதன் விலைகள் "நிச்சயமாக உயரும்" என்றும் எச்சரித்துள்ளது.
ரஷ்யாவும், உக்ரைனும் உலகின் மிகப்பெரிய கோதுமை விநியோகஸ்தர்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உணவு உற்பத்திக்கு அத்தியாவசியமான உரம் தயாரிக்கவும் பயன்படும் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. 2 Sisters நிறுவனம் பிரித்தானியாவில் 14,000 க்கும் மேற்பட்ட நபர்களை பணியமர்த்தியுள்ளனர். அத்துடன். கோழி மற்றும் குளிர்ந்த உணவுகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பண்ணைகளில் இருந்து பெறும் கோழிக்கு ஏற்கனவே 50 வீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக 2 Sisters நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
யுத்தம் மாதக்கணக்கில் தொடர்ந்தால், "அடிப்படையில் ஒரு நாடாக நாம் குறைவாக இறக்குமதி செய்து, அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும்" என்று அவர் பரிந்துரைத்தார். "ஒரு தீர்வைக் காண நாங்கள் அனைத்து விநியோக கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இது மிகவும் சிக்கலான பிரச்சினை." என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோதுமை மாவின் விலை உயர்வு
இதனிடையே, அதிகரித்துள்ள செலவுகள் தவிர்க்க முடியாமல் நுகர்வோருக்கே சுமையாக அமையும் என GR Wright & Sons நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் ரைட் தெரிவித்துள்ளார்.
நிறுவனம் தற்போது கொள்வனவு செய்யும் ஒவ்வொரு லாரி கோதுமைக்கும் இப்போது கூடுதலாக £2,500 செலவாகிறது, நிறுவனம் ஒரு நாளைக்கு சுமார் 20 லாரி கோதுமைகளை கொள்வனவு செய்கின்றது.
இந் நிலையில், வணிகத்தை தொடர்ந்து நடத்துவதற்கு மாதத்திற்கு £1m கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகையினால், "விலைகள் மிக விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. மாவின் விலையை உயர்த்தவில்லை என்றால் வியாபாரம் இல்லாமல் போகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.