உலக சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை உயர்வு:இலங்கைக்கு நேரடியான பாதிப்பு
உலக சந்தையில் கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்பட்ட ஒரு பெரல் கச்சாய் எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது உலக சந்தையில் ஒரு பெரல் கச்சாய் எண்ணெயின் விலை 112 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.
இந்த கச்சாய் எண்ணெய் விலை அதிகரிப்பானது நேரடியாக இலங்கை்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் கச்சாய் எண்ணெயின் விலைக்கு அமைய நாட்டில் எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
டொலர் கையிருப்பு தட்டுப்பாடு காரணமாக இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு பில்லியன் டொலர்களில் இந்தியா ஊடாகவே கச்சாய் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதால், இலங்கை மேலதிக கட்டணத்தை செலுத்த நேரிடும்.
கடந்த 15 ஆம் திகதி ஒரு பெரல் கச்சாய் எண்ணெயின் விலை 97 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அப்போது கச்சாய் எண்ணெயை இறக்குமதி செய்ய இலங்கை தவறியதால், மேலதிக நன்மையை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் மீண்டும் உக்கிமடைந்துள்ளதன் காரணமாகவே உலக சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அத்துடன் ஏமன் நாட்டின் ஹவுதி போராளிகள் சவுதி அரேபியாவின் கச்சாய் எண்ணெய் களஞ்சியத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இதற்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.