உயரும் வாழ்க்கைச் செலவு: நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம்
கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்க நாடாளுமன்றக் குழு கூடியபோது இலங்கை மசாலா கறிகளைப் போல விவாதம் சூடாக இருந்ததாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தமது விமர்சனப்பகுதியில் குறிப்பிட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்து கருத்துக்களை முன்வைத்த அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு வாழ்க்கை கடினமாகி வருவதாக தெரிவித்தனர். இதில்; களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் ஏகநாயக்கவும் உள்ளடங்குகிறார்.
இதன்போது கருத்துரைத்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, கூட்டுறவு நிலையங்களில் உணவுப்பொருட்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன என்றும், தவறான கூற்றுக்களால் உறுப்பினர்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது கடும் பிரதிவாதங்களை முன்வைத்தனர். இந்தக்கூட்டத்தின்போது அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நுகர்வோருக்கு நேரடியாகவே வீட்டுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் திட்டத்தை முன்வைத்தார். பொருட்களை விநியோகிக்க பிரதேச சபை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் இருந்து சிரிப்பொலி எழுந்தது. கூட்டத்தின் ஒரு உறுப்பினர் தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு சக உறுப்பினரிடம் “அவர்கள்( பிரதேசசபை உறுப்பினர்கள்) பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றாலோ அல்லது தங்களை விற்றாலோ என்ன ஆகும்? என்று கேட்டார்.
இந்தக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற அவைத் தலைவரான வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவே கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.