வாகனங்களின் விலை குறையுமா? - வெளியான தகவல்
அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கினாலும் வாகனங்களின் விலை அதிகரிப்பு குறையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே இதனை தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் வாகன உற்பத்தித்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது விலை உயரும் என்ற கோட்பாடு தற்போது வாகனங்களையும் பாதித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வாகனங்களின் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும் இந்நிலையிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 மார்ச் முதல் வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியது. கார் விற்பனையாளர்கள் வங்கிக் கடன்கள் மற்றும் பிற செலவுகளை வணிகங்களுக்கான மூலதன நிதியில் ஈடுசெய்கிறார்கள், இதனால் இந்தத் துறையில் பல வேலைகள் இழக்கப்படுகின்றன.
எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாத நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.