இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரிப்பு
2023 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பதிவாகும் எச்.ஐ.வி தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாலின நோய் நிபுணர் நிமாலி ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இது 2026 ஆம் ஆண்டு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி தொற்றுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளளன.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி, பெருந்தொற்றுக்குப் பின் இணையப் பயன்பாடு அதிகரிப்பு, பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் போதைப்பொருள் ஊசி பயன்பாடு அதிகரிப்பு போன்றவை நோய் பரவலுக்கு முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
ஆண்களுக்கு இடையிலான பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் போதைப்பொருள் ஊசி செலுத்துபவர்களிடையே பரவல் அதிகமாக உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
நவீன மருத்துவ முறைகள்
2021 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆண்டுக்கு 80 முதல் 100 சிபிலிஸ் பாதிப்புகளே பதிவாகிய நிலையில், தற்போது ஆண்டுக்கு சுமார் 1,500 பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஹெபடைடிஸ் பி தொற்றுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலம் இலங்கையில் எச்.ஐ.வி-க்கான இலவச சிகிச்சைகள் மற்றும் குறைந்த பக்கவிளைவுகள் கொண்ட நவீன மருத்துவ முறைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் நிமாலி ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.