தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை : யாழ். பல்கலை சமூகம்
இறுதிக்கட்ட ஈழப்போரின்போது இலங்கை இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நிலையிலுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக (Jaffna University) மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (17.05.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுக்கப்பட்ட சம்பவங்கள்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கை பொலிஸார், இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்புக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டு நினைவு கூறும் உரிமைகள் மறுக்கப்படும் வன்செயல்கள் அரங்கேறி வருகின்றமையை மாணவர் சமூகமாக நாம் கூர்ந்து நோக்குகின்றோம்.
அண்மையில் திருகோணமலை சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினைப் பரிமாறி இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நினைவு கூர்ந்த மக்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கிய பொதுமக்கள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பென்பது ஆள்புல மற்றும் குடிசன ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
எனினும், அனைத்துலகச் சமூகத்தில் நினைவு கூரல் என்பது மனித உரிமைகளாக மதிக்கப்படும் நிலையில், 2009ஆம் ஆண்டு ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவேந்தும் வகையில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களினை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
நினைவேந்தல் நிகழ்வுகள்
ஈழப்போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு முறையான உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தல்களேதும் வழங்கப்படாதவொரு நிலையில் போரின் வடுக்களிலிருந்தும் அதன் கொடூர முகங்களிலிருந்தும் விடுபடுவதற்கான உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கான மாற்றாக நினைவேந்தல் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.
இந்நிலையில், நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொதுமக்களை ஆங்காங்கே அச்சுறுத்தித் தடுப்பது மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அப்பாவிப் பொதுமக்கள் மீது பிரயோகிப்பதனூடாக நினைவேந்தல் செயற்பாடுகளிலிருந்து தமிழ் மக்களை விலக வைப்பதற்கு இலங்கை அரசு முழுவீச்சில் செயற்பட்டு வருகின்றது.
எனினும், இதுபோன்ற நினைவு கூரும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுவதாக” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |