இலங்கையின் மொத்த குடும்ப வருமானத்தில் 51.3 வீதத்தை பெறும் செல்வந்தர்கள்
இலங்கையின் பணக்கார 20 சதவீத குடும்பங்கள் நாட்டின் மொத்த குடும்ப வருமானத்தில் சுமார் 51.3 சதவீதத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஏழ்மையான 20 சதவீதத்தினர் 2019 இல் 4.6 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (CSD)தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2ம் திகதி வெளியிடப்பட்ட '2019 குடும்ப வருமானம் மற்றும் செலவினங்கள் (HIES) கணக்கெடுப்பு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
'பணக்கார குடும்பங்கள்' என வரையறுக்கப்பட்ட குடும்பங்கள், குறைந்தபட்சம் மாதம் 97,591 ரூபா வருமானம் ஈட்டும் அதேவேளை, ஏழ்மையான குடும்பங்கள் மதிப்பாய்வு ஆண்டில் மாதம் 28,057 ரூபாவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில் தேசிய மட்டத்தில் இலங்கைக்கான சராசரி குடும்ப வருமானம் 76,414 ரூபா எனவும் சராசரி மாதாந்த குடும்பச் செலவு 63,130 ரூபா எனவும் அது அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் மலையக கிராமம் ஆகிய துறைகளுடன் ஒப்பிடும் போது, அத்தகைய வருமானத்தை பிரிக்கும் போது, ஒப்பீட்டு புள்ளிவிவரங்கள் 116,670 ரூபா, 69,517 ரூபா மற்றும் 46,865 ரூபா எனவும், செலவு 95,392 ரூபா 57,652 ரூபா மற்றும் 38,519 ரூபா என பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
2019ம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 5.7 மில்லியன் குடும்பங்கள் இருந்ததாகவும், அந்த ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகை 21.2 மில்லியனாக இருந்ததாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019 இல் இலங்கையில் ஒரு குடும்பத்தின் சராசரி அளவு 3.7 ஆக இருந்ததாக அது தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது நாட்டில் வாழும் 'பணக்காரர்கள்' மற்றும் 'ஏழைகளின்' எண்ணிக்கையை முழுமையான அளவில் கணக்கிடவில்லை.
மேலும் அது அதன் மதிப்பைக் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.