இந்திய அரசாங்கத்தால் நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி:வவுனியாவில் விசாரணை ஆரம்பம்(Photos)
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவின் மதுராநகர் பகுதியில் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண அரிசி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட 1272 கிலோ நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
விசாரணை ஆரம்பம்
இவ் விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதேவேளை குறித்த அரிசியின் நிலை குறித்தும் அது பாவனைக்கேற்றதா என்பதனை ஆராயவும் பொது சுகாதார பரிசோதகர்களும் அங்கு பிரசன்னமாகி பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
குறித்த அரிசியினை மேலதிக பரிசோதனைகளுக்காக கொண்டு செல்ல வேண்டியிருப்பதனால் அரிசி முழுவதனையும் பிரதேச செயகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென பொதுமக்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்ததுடன் குறித்த அரிசி தற்போது பயன்படுத்தும் நிலையில் இல்லை எனவும் தெரிவித்தனர்.
பிரதேச செயலாளரின் கருத்து
இதேவைளே அப்பகுதி மக்களுக்கு கருத்து தெரிவித்த உதவி பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தரின் பக்கம் இதில் பிழைகள் இருந்தாலும் கூட பொது அமைப்புகளுக்கு தெரியாமல் இருக்கவில்லை எனவும் தனியே அரச உத்தியோகத்தர்கள் வைத்து மட்டும் கிராமத்தை நடத்தவில்லை.
அதற்காகவே பொது அமைப்பக்களை தெரிவு செய்கின்றோம். பொது அமைப்புக்களுக்கும் அதற்கான பொறுப்புள்ளது. தங்கள் மக்களின் பிரச்சினையை உரிய தரப்புக்கு எடுத்து கூறியிருக்க வேண்டும். இதற்கான பொறுப்பை பொது அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புகையிரத நிலையத்திற்கு வந்த பொருட்களை வாகனங்களில் கிரமங்களுக்கு அனுப்பிய போது மழை காரணமாக அரிசிகள் சில நனைந்தமையால் இந்த இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக கிராம சேவகர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர்.
பொது சுகாதார பரிசோதகர்களின் அறிக்கையின் பிரகாரம் குறித்த அரிசி உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களிடம் கேட்டபோது, இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
சம்மந்தப்பட்ட
இடத்திற்கு உத்தியோகத்தர்கள் அனுப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.



