அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட அரிசி:சுகாதார அதிகாரிகளால் முற்றுகை (Video)
மட்டக்களப்பு நகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட அரசி மற்றும் காலாவதி திகதி மறைக்கப்பட்ட நிலையில் பொதி செய்யப்பட்ட அரிசி மூடைகள் பெருமளவு பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஹோட்டல்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புது வருடம் மற்றும் நத்தார் பண்டிகை காலம் நெருங்கிவரும் நிலையில் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட உணவு விடுதிகள் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதனின் ஆலோசனைக்கு அமைவாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன்கீழ் மட்டக்களப்பு நகரில் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் தீபன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் உணவு விடுதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது இரண்டு உணவு விடுதிகளில் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட 120க்கும் மேற்பட்ட அரசி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேபோன்று ஒரு உணவகத்தில் பாவனை திகதி முடிந்த பின்னர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு புதிய பாவனை திகதியுடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 86 அரசி மூடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் உணவகம் ஒன்றினுள் அனுமதியின்றி ஏறாவூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 10 கிலோ மாட்டிறைச்சியும் மீட்கப்பட்டதுடன் அதனை கொண்டுவந்தவருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.









