கந்தளாயில் கருகும் நெற்பயிர்கள்: கவலையில் விவசாயிகள்
கந்தளாய் பகுதிகளில் நிலவும் ஒருவித மர்ம நோய்த் தாக்கத்தினால் பல ஏக்கர் கணக்கான நெற்பயிர்கள் மிக வேகமாக அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பரட்டைக்காடு, எரிக்கிலம்காடு, செட்டிக்காடு, ஏலாம் வாய்க்கால், வட்டுக்கச்சி மற்றும் வான் எல போன்ற பகுதிகளில் இந்தப் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திலிருந்து மீண்டு, தற்போது கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்கள், திடீரென மஞ்சள் நிறமாக மாறிப் பின்னர் கருகி வருவதால் விவசாயிகளின் பெரும்போகச் செய்கை கேள்விக்குறியாகியுள்ளது.
நோய்த் தாக்கம்
இந்த நோய்த் தாக்கம் குறித்து விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்ட போதிலும், அவர்களால் நோயைக் கண்டறியவோ அல்லது விஞ்ஞான ரீதியான தீர்வுகளை வழங்கவோ முடியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகளின் முறையான வழிகாட்டல் இல்லாத காரணத்தினால், விவசாயிகள் தமது 'கேள்வி ஞானத்தின்' அடிப்படையிலும், கிருமிநாசினி விற்பனை நிலைய உரிமையாளர்களின் பரிந்துரையிலும் பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறான தெளிவற்ற முறைகளால் பயிர்கள் மேலும் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்குப் பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
விவசாய அதிகாரிகளின் நேரடிப் பங்களிப்பு இல்லாத நிலையில், தமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள், நோய் என்னவென்று தெரியாமல் கண்ட கண்ட மருந்துகளைத் தெளிப்பதாலேயே பாதிப்பு இரட்டிப்பாவதாகத் தெரிவிக்கின்றனர்.
பல வகையான மருந்துகளைத் தெளித்தும் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, விவசாயத் திணைக்களம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, தகுதி வாய்ந்த அதிகாரிகளை நேரடியாக வயல் நிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
விஞ்ஞான ரீதியாக நோயைப் பரிசோதித்து, அதற்குரிய சரியான பூச்சி நாசினிகளைப் பரிந்துரைப்பதன் மூலமே எஞ்சியுள்ள பயிர்களையாவது காப்பாற்றித் தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியும் என கந்தளாய் பகுதி விவசாயிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam