இலங்கை குறித்து ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் முன்வைத்த விமர்சனம்: பதிலுக்கு தயாராகும் சட்டமா அதிபர்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், அண்மையில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க, இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட வோல்கர் டர்க், இலங்கையின் சட்டமா அதிபர் அலுவலகம் தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.
விமர்சனம்
சட்டமா அதிபர் திணைக்களம், நீதிக்கு ஒரு முக்கிய தடையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அதிகாரத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில், ஆணையாளரின் கருத்துக்களுக்கு பதிலளிக்க தயாராகி வருவதாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, வெளியுறவு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இலங்கையில்,பொலிஸாரின் வரையறுக்கப்பட்ட புலனாய்வுத் திறன், தகுதி வாய்ந்த தடயவியல் நிபுணர்கள் இல்லாமை மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகளின் வெற்றிடங்கள் என்பன சட்டமா அதிபரின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை தடுக்கின்றன என்று வோல்கர் டர்க் தெரிவித்திருந்தார்.



