மட்டக்களப்பில் அமெரிக்க துறவி படுகொலை மர்மம்!! 30 ஆண்டுகள் கடந்து வெளிவந்த உண்மை!!
அவரது பெயர் Rev Fr, Eugene John Hebert. உள்ளூர் மக்கள் 'பாதர் ஹேபியர்' என்று அவரை அன்புடன் அழைப்பார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த இயேசுசபை துறவி. பிரபல மனித உரிமை ஆர்வலரும் கூட.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பில் சேவையாற்றிக்கொண்டிருந்தவேளை, 1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி காணாமல் போயிருந்தார்.
தனது 17வது வயதில் தன்னை துறவறத்திற்கு ஒப்புக்கொடுத்த அவர், மட்டக்களப்பு மக்களின் மேம்பாட்டுக்காக தன்னை முழுவதுமாக அற்பணித்திருந்ததை அந்த மக்கள் தற்பொழுதும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.
1990ம் ஆண்டு ஜுன் மாதம் சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, தமிழ் முஸ்லிம் விரோதமும் திட்டமிட்டு அங்கு உருவாக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வாழைச்சேனை பகுதியில் இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் முற்றுகையிடப்பட்டிருந்த தமிழ் மக்கள், கிறிஸ்தவ குருவானவர்கள், அருட்சகோதரிகள் போன்றோரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றிவிட்டு, தனது வாகன ஓட்டுனரான 'பேட்ரம் பிரான்சிஸ்' என்ற தமிழ் இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, ஏறாவூர் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டார்.
வாழைச்சேனையில் இருந்த தனது சாரதியுடன் புறப்பட்ட அந்த அமெரிக்கத் துறவிக்கு என்ன நடந்தது என்ற தகவல் கடந்த 30 ஆண்டுகளாக மர்மமாகவே இருந்து வந்தது.
ஏறாவூர் முஸ்லிம் கிராமத்தில் வைத்து அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் இருந்தாலும், உண்மையில் என்ன நடந்தது என்ற விடயம் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வந்தது.
நீண்டகாலமாக மர்மமாக இருந்து வந்த அந்தப் படுகொலை பற்றிய தேடல்களை ஏராவூர் பிரதேசத்தில் மேற்கொண்ட போது, உண்மையில் அந்த நாளில் என்ன நடந்தது என்ற விபரங்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
அந்த படுகொலையை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள் நடந்த சம்பவத்தை உறுதியப்படுத்தியிருந்தார்கள். “பாதர் ஹேபியர்” என்று தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட Fr. Eugene John Hebert மற்றும் அவரது வாகன ஓட்டுனரான Betram Francis போன்றவர்கள் 'Friday Army' என்று தம்மை அழைத்துக்கொண்ட முஸ்லிம் ஊர்காவல் படையினரால் வெட்டப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சாட்சிபகர்கின்றார்கள்.
ஏறாவூர் புகையிரதப் பாதையை ஒட்டிய ஒரு சிறிய வீதியில் உள்ள ‘கரிக்கோச்சியடி’ என்ற இடத்தில் வைத்து, சிறிலங்கா இராணுவத்தினரின் கண் முன்பே அவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படைகளுக்கும் இடையில் கடுமையான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். தமிழ் முஸ்லிம் இனவன்முறைகளும் உச்சத்தைத் தொட்டிருந்த நேரம்.
வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் பிரதான நெடுஞ்சாலை முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்வதால், அந்தப்பாதை வழியாகச் செல்லாமல், ஏறாவூர் முஸ்லிம் பிரதேசத்தை சுற்றிவளைத்துச் செல்லும் புகையிரத வீதிவழியான பாதையை 'பாதர் ஹேபியர்' தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலாய விளையாட்டு மைதானத்திற்கு அப்பாலான பகுதியில் மக்கள் நடமாட்டம் பெரிதாக இருப்பதில்லை அந்த நேரத்தில்.
எனவே அந்தப் பாதை வழியாக பயணம் செய்த ‘பாதர் ஹேபியர்’ மற்றும் ‘பேட்ரம் பிரான்சிஸ்’ போன்றவர்களை துப்பாக்கியால் சுட்டு கைப்பற்றிய ‘பிரைடே ஆர்மி’ என்ற முஸ்லிம் ஊர்காவல் படையினர், அவர்களை அடித்து, வாளினால் வெட்டிய பின்னர் உயிருடன் 'டயரில்' கிடத்தி எரித்து படுகொலை செய்ததாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
'அந்த வெள்ளைக்கார பாதிரி ஆங்கிலத்திலும், தமிழிலும் திட்டியதும் கதறியதும் தனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருப்பதாக' அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் எம்மிடம் தெரிவித்திருந்தார்.
அந்தச் சம்பவம் ‘கரிக்சோச்சியடி’ என்று அழைக்கப்பட்ட இடத்தில் இடம்பெற்றதாக அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.