கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயம் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் புதிதாக புனரமைப்புச் செய்யப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் யாழ்.மறைமாவட்ட ஆயர் அவர்களால் இன்று அபிஷேகம் செய்து வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயம் 1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட ஓர் ஆலயமாக காணப்படுவதுடன், கடந்த 44 வருடங்களுக்கு மேலாக இதனுடைய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது காணப்பட்ட நிலையில், குறித்த ஆலயமானது பங்கு மக்களினதும், பிரதேசத்தைச் சேர்ந்த இந்து மக்களினதும் புலம்பெயர் வாழ் உறவுகளினதும் நிதி பங்களிப்புடன் சுமார் 72 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று மாலை அபிஷேகம் செய்து வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு பரந்தன் பங்குத்தந்தை ஆர். எச் சகாய நாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு திருப்பதி நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஆலய கட்டுமானப் பணிகளுக்காக பங்காற்றியவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பங்கு மக்கள் சார்பாக மறைமாவட்ட ஆயர் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் ஆயர் இல்ல பங்கு தந்தையர்கள், அயல் பிரதேச பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







