துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது
சட்டவிரோதமான முறையில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், 75 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் பாணந்துறையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை, பின்வத்தை பகுதியைச் சேர்ந்தவராவார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பின்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோத ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, மெகசின் ஒன்று, தோட்டாக்கள், இரும்பு வாள் ஒன்று மற்றும் கையடக்கத் தொலைபேசி ஒன்று ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பின்வத்தை பகுதியைச் சேர்ந்த 'பின்வத்தை பொடி சுதுவா' என அழைக்கப்படும் 'ஹத்ததுர தமித் தர்ஷன சில்வா' என்ற திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரின் நெருங்கிய சகா எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன், அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட 'நதீக' என்பவருடனும் இவர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பின்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.