ஆசிரியர் இடமாற்றக் கொள்கை மறுசீரமைப்பு - அமைச்சரவை ஆலோசனைக் குழுவில் கவனம்
இலங்கை முழுவதும் உள்ள ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, ஆசிரியர் இடமாற்றக் கொள்கைகளை மறுசீரமைப்பதில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவின் தலைமையில், நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில் இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக, ஒரே பாடசாலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
நடைமுறைச் சிக்கல்
ஆசிரியர் இடமாற்ற வாரியத்தினால் தற்போது நடைமுறையில் உள்ள 30 கிலோமீட்டர் தூர வரம்பு, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள தொலைதூரப் பாடசாலைகளுக்கு நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துவதை குழு கண்டறிந்தது.
இதற்கமைய, இந்தத் தூர வரம்பை மீள்பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர் இடமாற்ற வாரியத்திற்கு அறிவுறுத்த குழு தீர்மானித்தது.
மேலும், மாற்று தேசியப் பாடசாலைகள் இல்லாத காரணத்தினால், இடமாற்றம் பெற முடியாமல் தவிக்கும் சில தேசியப் பாடசாலை ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஆசிரியர் இடமாற்ற நோக்கங்களுக்காக மட்டும், தேசியப் பாடசாலைகளுக்கும் மாகாணப் பாடசாலைகளுக்கும் இடையில் இடமாற்றங்களை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற தீர்மானிக்கப்பட்டது.

தகவல்களைச் சரியாகச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளமை
இதனிடையே, சில பாடசாலைகள் ஆசிரியர்களின் சேவைக்காலம் குறித்த தகவல்களைச் சரியாகச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளமை மற்றும் ஆசிரியர் தரவுத்தளத்தில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டன.
தகவல்களை மறைப்பதாகச் சந்தேகிக்கப்படும் பாடசாலைகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வது குறித்தும், ஆசிரியர்களின் சேவைக்காலத்தை துல்லியமாகக் கணக்கிடுவதற்காக ஆசிரியர் தரவுத்தளத்தைப் புதுப்பிப்பது குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அத்துடன், வட மாகாணத்திற்கு என புதிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை உருவாக்குவது குறித்தும் குழு கவனம் செலுத்தியது; இது தற்போதுள்ள கொள்கைக்குப் பதிலாக 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். இந்தக் கூட்டத்தில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.