பிரித்தானியாவில் திட்டமிட்டப்படி கோவிட் - 19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்! - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
பிரித்தானியாவில் திட்டமிட்டப்படி கோவிட் - 19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 12ம் திகதி அத்தியாவசியமற்ற கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் திறக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
டவுனிங் வீதியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே மே மாதம் 17ஆம் திகதி சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் கோவிட்-19 பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், 2,379 பேர் பாதிக்கப்பட்டதோடு 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கோவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 4,364,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 126,882 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 315,384 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 517 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 3,922,263 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.