பிரித்தானியாவில் விரைவில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்! - தலைமை மருத்துவ ஆலோசகர் விடுத்த எச்சரிக்கை
கோவிட் - 19 கட்டுப்பாடுகளை மிக விரைவில் தளர்த்துவது நோய் பரவலின் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என பிரித்தானியாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
கட்டுப்பாடுகளை தளர்த்தும் இந்த நடவடிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் உயிருக்கு ஆபத்தாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பிரித்தானியாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் கிறிஸ் விட்டி கருத்து வெளியிடுகையில்,
“நோய் தொற்று முடிந்துவிட்டது என்று கணிசமானவர்கள் நினைக்கலாம். நிலைமைகள் எவ்வளவு விரைவாக மோசமாக மாறும் என்பதை மறந்துவிடுவது மிகவும் எளிது” எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் - 19 தொற்று பரவலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தொடர்பான அழுத்தத்தின் மத்தியில் பேராசிரியரின் கருத்து வெளியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பிரித்தானியாவின் கோவிட் - 19 தொடர்பான நாளாந்த புள்ளிவிபரங்களின் படி மேலும் 5,766 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 231 கோவிட் -19 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்கள் வார இறுதியில் கோவிட் -19 தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒக்டோபர் 25ம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக 10,000க்கும் குறைந்ததுள்ளதை காட்டுகிறது.
இதன்படி, 9,418 பேர் வைத்தியசாலைகில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.