சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள்
தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தல் ஏன் முக்கியத்துவமுடையது? செல்வநாயகம் தமிழ் மக்களைக் கடவுளிடம் ஒப்படைத்த பொழுதே அக்கட்சி செயல்பூர்வமாக இறந்து போய்விட்டது.
அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்று ஒரு விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைக்கப்படுகின்றது.
கோட்பாட்டு ரீதியாக அது சரி. ஆனால் நடைமுறையில் தமிழரசுக் கட்சி இப்பொழுதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
உள்ளதில் பெரிய கட்சி அது. தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது. இருக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள் தான் தமிழ் அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.
சமஸ்டி கட்சி
அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. இருப்பதை வைத்துத்தான் அரசியல் செய்யலாம். இருப்பதை வைத்துத்தான் அரசியலை எழுதலாம்.
கற்பனைகளில் இருந்தோ அல்லது விருப்பங்களில் இருந்தோ அரசியலை ஆய்வு செய்ய முடியாது. உள்ளதில் பெரிய கட்சி. அதற்குள் நடக்கும் தேர்தல் என்று பார்க்கும் பொழுது தமிழரசு கட்சிக்குள் நடக்கும் தேர்தலுக்கு முக்கியத்துவம் உண்டு.
அதேசமயம் அது தமிழ் அரசியலின் இயலாமையைக் காட்டும் ஒரு தேர்தல் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஏனென்றால், தமிழ் அரசியல் கட்சி மைய தேர்தல் மைய அரசியலாகச் சுருங்கி போய் இருப்பதை அது காட்டுகின்றது.
இது முதலாவது காரணம். இரண்டாவது காரணம், தமிழரசுக் கட்சியின் ஆங்கிலப் பெயர் சமஸ்டி கட்சி. அதற்கு இப்பொழுது 73 வயது. 73 ஆண்டுகளாக கட்சி தன் பெயரில் வைத்துக் கொண்டிருக்கும் சமஸ்டியை அடைய முடியவில்லை.
எனவே அதன் தேர்தல் வாக்குறுதிகள், இலட்சியங்கள் என்பவற்றின் அடிப்படையில் சொன்னால், தமிழரசுக் கட்சி ஒரு தோல்வியுற்ற கட்சி. அதன் புதிய தலைவர் கட்சியை வெற்றிப் பாதையில் செலுத்துவாரா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
அவர் கடந்த 73 ஆண்டு கால தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல, அண்மையில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்.
73 ஆண்டு கால தோல்விக்குக் காரணம் தமிழரசுக் கட்சியிடம் பொருத்தமான வினைத்திறன் மிக்க வழிவரைபடம் இருக்கவில்லை என்பதுதான்.
கட்சிக்குள் ஐக்கியம்
விக்னேஸ்வரன் கூறுவது போல எல்லாருமே சமஸ்டிப் பண்புடைய தீர்வைதான் கேட்கின்றார்கள். ஆனால் ஒருவரிடமும் சமஷ்டிக்கான வழிவரைபடம் கிடையாது.
சமஸ்டியை எப்படி அடைவது? நிச்சயமாக நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாக மட்டும் அடைய முடியாது. நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே ஒரு மக்கள் இயக்கம் தேவை.
அதே சமயம் அந்த மக்கள் இயக்கத்தின் வழிநடத்தலின் கீழ் பொருத்தமான ஒரு வெளிவிவகாரக் கொள்கையை முன்னெடுக்கும் வினைத்திறன் மிக்க ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்பு வேண்டும்.
ஏனென்றால், எல்லாத் தேசிய இனப் பிரச்சினைகளும் சாராம்சத்தில் பிராந்திய மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகள் தான்.
அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வு தான் உண்டு.அவை உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. உள்நாட்டுப் பிரச்சினை ஒன்றை வெளிநாடுகள் கையாளும் போது அது அனைத்துலகப் பரிமாணத்தைப் பெறுகின்றது.
எனவே வெளிநாடுகளின் அழுத்தத்தால் தான் அதற்குத் தீர்வு வரும். இந்த அடிப்படையில் பார்த்தால்,வெளிநாடுகளைக் கையாள்வதற்குத் தேவையான பொருத்தமான வினைத்திறன்மிக்க ஒரு வெளியுறவுத் தரிசனமும் வெளியுறவுக் கட்டமைப்பும் வேண்டும்.
தமிழ் அரசியலில் அப்படியேதும் உண்டா? தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சிறீதரன் இப்பொழுது ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி மட்டுமல்ல.
அவர் ஒரு கட்சியின் தலைவர். எனவே மூன்று தளங்களில் அவர் ஒருங்கிணைப்பைச் செய்ய வேண்டும். முதலாவதாக, கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்.
சிறீதரனின் உழைப்பு
தேர்தலின் விளைவாக கட்சி துருவமயப்பட்டிருக்கிறது. இரண்டு பகை அணிகளையும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும்.
தேர்தலை நடத்தி ஒரு தலைவரை தேர்வு செய்த விடயத்தில் தமிழரசுக் கட்சி ஒரு முன்னுதாரணத்தை ஏனைய கட்சிகளுக்குக் காட்டியிருக்கின்றது.
பெருமளவுக்கு பரம்பரை பரம்பரையாக வரும் தலைவர்களையும் கேள்விக்கிடமற்ற தலைவர்களையும் கொண்ட ஒரு பிராந்தியத்தில், தமிழரசுக் கட்சியின் முன்னுதாரணம் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று.
தேர்தலில் தோற்ற தரப்பு கட்சியை விட்டு வெளியேறினால், அந்தத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயக மாண்பு சிதைந்து விடும்.சுமந்திரன் அனைத்துலகத் தொடர்புகளை அதிகமாக வைத்திருப்பவர்.
அது ஒரு வளம்.ஒரு வெளியுறவுக் கட்டமைப்புக்குள் அவருக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும்.ஆனால் ஒரு வெளியுறவுக் கொள்கைக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும்.
ஒரு தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தியவர் அவர்தான்.ஏனெனில் வெற்றி தனக்கே என்று அவர் திட்டவட்டமாக நம்பினார். அதற்காக அவர் பல ஆண்டுகள் உழைத்துமிருக்கிறார்.
சிறீதரன் அவமானகரமான ஒரு தோல்வியைத் தழுவுவார் என்று சுமந்திரனின் ஆதரவாளர்கள் தொடக்கத்தில் நம்பினார்கள். ஆனால் சிறீதரன் கடுமையாக உழைத்தார்.
அவருடைய பிரதான பலம் கிளிநொச்சியில் இருக்கின்றது.அதோடு,மட்டக்களப்பு தொடக்கத்திலிருந்து அவரோடு நின்றது. சிறுதொகுதி உறுப்பினர்கள் சாணக்கியனோடு நின்றார்கள்.
ஏனையவர்கள் திட்டவட்டமாக சிறிதரனை ஆதரித்தார்கள்.வெற்றிக்குரிய அடிப்படை வாக்குகளில் மட்டக்களப்பு வாக்குகள் உண்டு. அடுத்தது, யாழ்ப்பாணம் தீவுப்பகுதி.
தேசியம்
அமிர்தலிங்கத்திற்கும் காவலூர் நவரத்தினத்துக்கும் இடையிலான பகிரங்க விவாதத்தில் தொடங்கி தீவுப் பகுதிக்கு என்று சிறப்பான முன்னுதாரணங்கள் உண்டு.
நவரத்தினம் தனிநாட்டுக் கோரிக்கையின் பிதாக்களில் ஒருவர். பலமான தமிழரசுக் கட்சியின் தலைமையை அவர் எதிர்த்தார்.அவரோடு பக்கபலமாய் நின்றவர்கள் அநேகர் தீவுகளைச் சேர்ந்தவர்கள்தான்.
அண்மையில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் தீவுப்பகுதி உறுப்பினர்கள் ஒரு சிறிய தொகை.எனினும் அச்சிறு தொகை அசையாது சிறீதரனோடு நின்றது.
இவைதவிர கடைசி நேரத்தில் வெல்பவரின் பக்கம் சாய்பவர்கள் சிறீதரனை வெற்றிபெற வைத்தார்கள்.சிறீதரன் அதற்காகத் திட்டமிட்டு உழைத்தார்.வெல்லமுடியும் என்ற நம்பிக்கையை அவர் தொடக்கத்திலிருந்து இழக்கவில்லை.
அதை ஒரு கொள்கை வெற்றி என்று கூறுவது மிகைப்படுத்தலாக இருக்கலாம். தமிழரசுக் கட்சி மட்டுமல்ல ஏனைய கட்சிகளுக்குள்ளும் விசுவாசக் கட்டமைப்புகள் கொள்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படவில்லை.
அவை நலன்களின் அடிப்படையில்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன. தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் நேர்மையானவர்கள்? எத்தனை பேர் தேசியம் என்றால் என்ன என்பதனை அதன் நடைமுறை அர்த்தத்தில் விளங்கி வைத்திருக்கிறார்கள்? கடந்த 15 ஆண்டுகளில் தேசியம் எனப்படுவது திருடர்களும் பொய்யர்களும் பாலியல் குற்றவாளிகளும் எடுத்தணியும் முகமூடியாக மாறியிருக்கிறது.
தேசிய ஒருமைப்பாடு
இதை இவ்வாறு கூறுவதன்மூலம் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய நேர்மையான தேசியவாதிகளை இக்கட்டுரை கொச்சைப்படுத்தவில்லை.
ஆனால் அது ஒரு பொதுப்போக்கு. கடந்த 15 ஆண்டு கால தேசிய நீக்க அரசியலின் விளைவு.எனவே கட்சியை கொள்கை ரீதியாக வார்த்தெடுக்க வேண்டிய ஒரு பொறுப்பு சிறீதரனுக்கு உண்டு.அவர் இப்பொழுது தனது சொந்த வெற்றியின் கைதி.
தனக்குக் கிடைத்த வெற்றி கொள்கை வெற்றிதான் என்று அவர் நிரூபித்துக்காட்ட வேண்டும். இது முதலாவதாக சிறீதரன் செய்ய வேண்டியது.
அதாவது கட்சிக்குள் கூட்டொருமைப்பாட்டை ஆகக்கூடியபட்சம் கட்டியெழுப்புவது. இரண்டாவதாக, சிறீதரன் தனது சொந்த மாவட்டத்திலேயே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும்.
அங்கே அவர் அரசியலை துருவமயப்படுத்தி வைத்திருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில், கிளிநொச்சியில்தான் துரோகி - தியாகி என்ற உரையாடல் அதிகமாக உண்டு.
அதற்குக் காரணம் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சி அங்கே ஒரு பலமான வாக்குத் தளத்தைக் கொண்டிருப்பதுதான்.அதற்கு ஒரு பலமான காரணம் உண்டு.
கிளிநொச்சி போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இறுதிக்கட்டத் தலைநகரமாக இருந்தது.2009க்குப் பின் அங்குள்ள புனர்வாழ்வு பெற்ற போராளிகளில் ஒரு பகுதியினருக்குச் சந்திரகுமார் பெருமளவுக்குப் புகலிடம் கொடுத்தார், பாதுகாப்புக் கொடுத்தார், தொழில் கொடுத்தார்.
அவ்வாறு அவரால் அரவணைக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் பலர் முன்பு இயக்கத்தில் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தவர்கள். அந்த ஊரவரல்லாத சந்திரக்குமாருக்கு அவர்கள் பலமான ஒரு வாக்குத்தளத்தைக் கட்டியெழுப்பினார்கள்.
சந்திரக்குமாரின் சமத்துவக் கட்சியில் மாவட்ட அமைப்பாளரும் உட்பட முக்கிய பொறுப்புக்களில் பல முன்னாள் புலிகள் இயக்கத்தவர்கள் உண்டு.
தமிழ்த் தேசியப் பரப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு வெளியே அதிகம் முன்னாள் விடுதலைப் புலிகளைக் கொண்ட கட்சி சமத்துவக் கட்சிதான்.
சிறீதரன் தலைமைக்கு தயாரா?
மேலும் சந்திரக்குமார் அங்கே பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் அதிகமாக வேலை செய்திருக்கிறார். அவருடையது அபிவிருத்தி மைய அரசியல்.
இவ்வாறு சிறீதரனின் சொந்த மாவட்டத்துக்குள்ளேயே அவருக்குச் சவாலாக பலமான எதிர் வாக்குத்தளம் உண்டு.அது இனப்படுகொலையாளிகளின் வாக்குவங்கி என்று கூறி முத்திரை குத்திவிட்டுப் போக முடியாது.
அல்லது தியாகி-துரோகி என்ற அளவுகோல்களால் அதை மதிப்பிடவும் முடியாது.இந்த விடயத்தில் சிறீதரன் பண்புருமாற்றம் ஒன்றுக்குத் தலைமை தாங்கத் தயாராக இருக்க வேண்டும்.
இது இரண்டாவது. மூன்றாவது,கட்சிகளை ஒருங்கிணைப்பது. 2009க்கு முன் இருந்த அதே ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.கடந்த 15 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் தேசத் திரட்சியை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்திக்க வேண்டும்.
எல்லாவற்றையும் கடடமைப்புக்குள்ளால் சிந்திக்க வேண்டும்.குறைந்தபட்சம்வெளி விவகாரத்திலாவது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
இந்தியாவையும் ஐநாவையும் மேற்கு நாடுகளையும் அக்கட்டமைப்புத்தான் கையாள வேண்டும்.தனிநபர்கள் தனியோட்டம் ஓடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
அது சிறீதரனுக்கும் பொருந்தும். எனவே சிறீதரன் முதலில் கட்சிக்குள் துருவ நிலைப்பட்டிருக்கும் உறுப்பினர்களை ஒரு திரளாக வார்த்தெடுக்க வேண்டும்.
ஒரு கூட்டுணர்வை உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, தனது மாவட்டத்தில் அதைச் செய்ய வேண்டும். மூன்றாவதாக,தேசிய மட்டத்தில் அதைச் செய்யவேண்டும். அதாவது ஒரு பண்புரு மாற்றத்திற்குத் தலைமை தாங்க வேண்டும். அதற்கவர் தயாரா?
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 28 January, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.