கரையோர பகுதியை கோரும் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் : சபா.குகதாஸ்
யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரால் சங்கானை பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (29.11.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி பொது அமைப்புகளிடம் பிரதேச செயலாளரால் இது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் குறித்த விடயத்தை எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். குறித்த பகுதி மக்கள் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதை முற்றிலும் நிராகரித்திருக்கிறார்கள்.
கரையோர பகுதி மக்களின் வாழ்வாதரமே கடற்கரையை நம்பியே காணப்படுகின்றது. மாட்டுவண்டி சவாரித்திடல், சுடுகாடுகள், விவசாய நிலங்கள் காணப்படுகின்றன.
ஆகவே வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் முன்மொழிவை முற்றிலும் நிராகரிக்கிறோம். குறித்த பகுதியை வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கினால் விகாரைகள், சிங்கள குடியேற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் குறித்த முன்மொழிவை நிராகரித்து வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இல்லையேல் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



