சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக மாபெரும் போராட்டமொன்றினை நடாத்த தீர்மானம்
வவுனியாவில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ் கட்சிகள் வவுனியாவில் அவசரமாக கூடி ஆராய்ந்திருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தில் திட்டமிட்ட ரீதியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. மகாவலி திட்டத்தின் ஊடாகவும் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இன விகிதாசாரம் மாற்றமடைந்து வவுனியா வடக்கு பிரதேச சபை பறிபோகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதுடன், சிங்கள பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்ப்பை வெளியிட வேண்டும் என இக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து வரும் வாரம் வவுனியா வடக்கில் குறித்த குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ் கட்சிகள், பொது மக்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவது எனவும் இதில் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் (Sivashakthi Anandan) கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவினுள்ளே அரசாங்கம் 1500 இற்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை குடியேற்றுவதற்கான ஆரம்ப வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
இந்த வேலைத்திட்டமானது ஜனாதிபதி வவுனியாவிற்கு வருகை தந்தபோது ஏற்கனவே திட்டமிட்டு குடியேற்றப்பட்ட நாமல்கம மற்றும் பொகஸ்வெவ கிராமத்தை சேர்ந்த சிங்கள மக்கள் நிர்வாக ரீதியாக அனுராதபுரத்திற்கு சென்று தமது கடமைகளை செய்யமுடியாத காரணத்தினால் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் தம்மை உள்வாங்குமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ஜனாதிபதியின் உத்தரவின் பெயரால் இதுவரையும் 300 இற்கும் மேற்பட்ட தென்பகுதியை சேர்ந்த சிங்கள குடும்பங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினுள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் மேலதிகமாக 1500 இற்கும் மேற்பட்டவர்களை குடியேற்றம் செய்யப்படவுள்ள காரணத்தினால் இது இன விகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்.
நெடுங்கேணி பிரதேச சபை பறிபோகும் ஆபத்து உள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக கூட பெரும்பான்மை இனத்தவரை கொண்டு வர உள்ளார்கள். ஏற்கனவே இந்த அரசாங்கம் மகாவலி எல் வலயத்தின் ஊடாக மாமடுவில் இருந்து கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ,கருணாட்டுக்கேணி வரை திட்டமிட்டு குடியேற்றத்தினை விஸ்தரிப்பு செய்வதனால் வடக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்.
எனவே, இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் வாரம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.


ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam