மட்டக்களப்பில் மேலும் மூன்று தினங்களுக்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் மூன்று தினங்களுக்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவினரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்று மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனைகளில் 26பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் இன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் ஒரு நாள் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தொடக்கம் மேலும் மூன்று தினங்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
மருந்தகம், பலசரக்கு விற்பனை நிலையம், இறைச்சி, மீன்கடைகள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்தியாவசிய தேவை கருதித் திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சமுக இடைவெளியினை பேணி, கைகளைக் கழுவும் வசதிகள் செய்யப்பட்டு, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியமானதாகும்.
குறித்த பணிப்புரைகளை மீறும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மாநகர கட்டளைச் சட்டத்தின் ஊடாகவும், தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு ஊடாகவும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொதுமக்களும் கொரோனா அச்சத்திலிருந்து எமது பிரதேசத்தினை மீட்டெடுக்கப் பூரண ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும்.
அத்துடன் நாளை பிறக்கவுள்ள புதுவருடத்தினை வீட்டிலிருந்து நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரம் கொண்டாடுமாறும், ஆலய வழிபாடுகளில் ஈடுபடுகின்ற மக்கள் அவ்வாலயம் சிறிய ஆலயம் ஆயின் 25 பேரும் பெரிய ஆலயம் ஆயின் 50பேர மாத்திரம் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மாநகரசபையின் அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து நடமாடும் வியாபாரிகள் மட்டக்களப்பு நகருக்குள் வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் ஆபத்தான விடயம். இவை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும். இவ்வாறான விடயங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
2020ஆம் ஆண்டு பல அனுபவங்களை எங்களுக்கு கற்றுத் தந்துள்ளது. 201ஆம் ஆண்டை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கவிருக்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் புதுவருடத்தினை கொண்டாடுபவர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றிக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.






