அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் (Photos)
மாத்தறை நில்வளா கங்கையில் தடுப்பணையில் உள்ள ஒரு பகுதியை மாற்றுவதற்கும், கிளை ஆற்றில் உள்ள தடைகளை அகற்றுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (09.10.2023) விசேட கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டம் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நில்வளா கங்கையில் அமையப்பெற்றுள்ள தடுப்பணையால் தான் இந்த நிலைமை என மக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வறட்சி காலத்தில் கடல் நீர் ஆற்றுடன் வந்து கலக்காமல் இருப்பதற்காகவும், சுத்தமான குடிநீர் பெரும் நோக்கிலும் தான் இந்த தடுப்பணை அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே இக்கூட்டத்தின் போது வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால தொழிநுட்ப ரீதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இவ்வேளையிலேயே அந்த தடுப்பணையில் ஒரு பகுதியை மாற்றுவதற்கும் அந்த ஆற்றில் உள்ள தடைகளை அகற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட வேலைகளை ஆரம்பிக்க அனுமதி
பொறியியலாளர்களின் மேற்பார்வையின் மூலம், இராணுவம் மற்றும் கடற்படையில் உள்ள அதிகாரிகளின் உதவியுடன் இந்த ஆரம்பகட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருப்பதற்காக எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் நீர்வழங்கல் அமைச்சும், நீர்ப்பாசனத்துறை அமைச்சும் இணைந்து ஒரு கூட்டு அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்கவும் கொள்கை ரீதியில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நீர்ப்பாசனத்துறை இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிபுண ரணவக்க, புத்திக பத்திரண, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அதிகாரிகள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், நீர்ப்பாசனத்துறை அமைச்சின் அதிகாரிகள், மாத்தறை மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகள், பொறியியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
