அமெரிக்காவில் ஈழத்தமிழர் தொடர்பில் முக்கிய தீர்மானம்! இந்தியாவின் முடிவு?
அமெரிக்க காங்கிரஸ் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு ,கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூர்வீக தாயகமாக அங்கீகரிக்கும் நிலைப்பாடு இந்தியாவின் அனுமதியுடனேயே செயற்படுத்தப்பட்டிருக்க கூடும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க காங்கிரஸ் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூர்வீக தாயகமாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.
அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்களின் ஏற்பாட்டிலே இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை தயாரித்து வெளியுறவுக் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
அவர்களின் அங்கீகாரத்தின் பின்னர் இது செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பம் நிலவுகிறது.
மேலும் அமெரிக்காவின் வெளியுறவு கமிட்டியின் முடிவு இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் தங்கியுள்ளது. உள்ளக அரசியலில் தமிழர் தரப்பாகிய நாம் ஒன்று பட்ட குரலுடன் செயல்படுவதே சர்வதேச நாடுகளின் முயற்சிக்கு பலமளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.