அமர்வுகளை தொடர்ந்தும் நடத்த நாடாளுமன்றம் தீர்மானம்
உரிய சுகாதார முறையின்படி தமது அமர்வுகளை தொடர்ந்தும் நடத்திச்செல்ல நாடாளுமன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து சுகாதார நிலைமைகள் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தினார். அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற இடங்களெல்லாம் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
அதேநேரம் நாடாளுமன்ற பணியாளர்கள் மத்தியில் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் புதன்கிழமைக் கூடும் சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரக்குழு அடுத்த நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.