வவுனியா நகரில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேண தீர்மானம்
வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று மற்றும் மரணங்களை கருத்திற்கொண்டு நகரில் முழு முடக்கம் ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று சில பொது அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் வவுனியா வர்த்தக சங்க வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வர்த்தகர்கள் மற்றும் சேவை பெறுநர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் உடனடியாக பொது முடக்கத்தினை தவிர்த்து அனைத்து நிறுவனங்களும் ,பொதுமக்களும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தற்காலிகமாக இயங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியில் வவுனியா நகருக்குள் நுழையும் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதோடு நகரில் அமைந்துள்ள நிறுவனங்களும் பொதுமக்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் அசமந்தப்போக்கினை கடைப்பிடிக்கும் பட்சத்தில் சகல தரப்பினரது ஒத்துழைப்போடு வவுனியா மாவட்டத்தில் முழு முடக்கத்தினை ஏற்படுத்துவதெனவும் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்வதுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை இனங்காணவும் விசேட குழுவொன்றை அமைத்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், மாவட்ட விவசாய சம்மேளனம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
