இராணுவத்தினரால் தொற்று நீக்கப்பட்ட புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி
புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் பிரதான சந்தை உள்ளிட்ட கடை தொகுதிகளைத் திறக்கும் நோக்கத்தோடு குறித்த பகுதி இராணுவத்தினரால் முற்றுமுழுதாக சுத்திகரிக்கப்பட்டுத் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை இன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட
கோவிட் தொற்றைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய ஒரு கோவிட் கொத்தணி
ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக நேற்று மாலை வரையான தகவல்களின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது கோவிட் தொற்றுக்குள்ளான 447 பேர் கோவிட் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 554 குடும்பங்களைச் சேர்ந்த 2205 பேர் தொடர்ந்தும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 17-05-2021 முதல் இன்று வரை புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரதேசத்தில் 9 கிராம அலுவலர் பிரிவுகளும், முள்ளியவளை பொலிஸ் பிரிவில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளுமாக 11 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் 21 ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் முடக்கப்பட்ட 54 கிராம அலுவலர் பிரிவுகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டபோதும் தொடர்ந்தும் முடக்கப்பட்ட பகுதிக்குள் அடங்கும் புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி வர்த்தக நிலையங்கள் சந்தை வளாகம் என்பன முடங்கி காணப்பட்டன.
இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி தற்போது நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டு இருக்கின்ற பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் வேளையில், புதுக்குடியிருப்பு நகர வர்த்தக நிலையங்கள், சந்தை வளாகம், வங்கிகள் எங்கும் தொற்று நீக்கிகள் விசிறப்பட்டன.
இந்த செயற்பாடுகளை முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.
இங்கு வருகைதந்த முல்லைத்தீவு
மாவட்ட பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மக்களுடைய நலன்களைக் கருதி
தாம் தம்மாலான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், மக்கள் பொறுப்புணர்வுடன்
செயற்படுவதன் மூலம் மாத்திரமே இந்த கோவிட்டில் இருந்து விடுபட முடியும் எனவும்
மக்களை விழிப்பாகச் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.



