முல்லைத்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த யானையில் இருந்து முக்கிய தடையப்பொருள் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கள்ளியடி வயல் வெளிப்பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக்காடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் யானையின் உடலம் ஒன்று நேற்று (02) இனம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை புதுக்குடியிருப்பு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
மருத்துவ பரிசோதனைகள்
யானையின் உயிரிழப்பு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் உயிரிழந்த யானைக்கு உடற்கூற்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட போது யானையின் தலையில் சட்டவிரோத துப்பாக்கி சன்னம் ஒன்று பாய்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த யானை உயிரிழந்துள்ளமை சட்டவிரோத துப்பாக்கி சன்னம் பட்டு என தெரியவந்துள்ளதை தொடர்ந்து இது திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிந்துள்ளது.
இந்த நிலையில் யானை உயிரிழந்த பிரதேசம் பற்றைக்காட்டு பகுதியாக காணப்படுகின்றது. அதற்கு அருகில் விவசாயி ஒருவர் நெற்செய்கை மேற்கொண்டு வந்துள்ளார். அந்த விவசாயி நாள்தோறும் குறித்த யானையினை காண்பதாகவும் வெடி போட்டு கலைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகள்
அவ்வாறே நேற்று(01.08.2024) அன்று இரவும் நெற்செய்கைக்கு காவல் காத்த விவசாயி யானையினை கண்டுள்ளார்.
சீனா வெடி எனப்படும் யானை வெடிகளை விவசாயிகள் எறிந்து நெற் பயிருக்குள் யானை வந்து நாசம் செய்யாமல் கலைத்துவரும் நிலையில் குறித்த யானை மீது யார் துப்பாக்கிசூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள விவசாயிடம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு கிழக்கு கிராம சேவகரின் ஏற்பாட்டில் குறித்த யானையின் உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |