முல்லைத்தீவில் ஒரு தொகுதி முதிரை மரக்குற்றிகள் மீட்பு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூற்றுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கையானது நேற்று (08.05.2024) முல்லைத்தீவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மரக்கடத்தல்
புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வந்துள்ள நிலையில், வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்துள்ளது.
இவ்வாறான நிலையில் இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக நேற்று மாலை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டுள்ளனர்.
இதனால் குறித்த தகவல் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தனபாலவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் காணி
இதனையடுத்து பொலிஸ் மா அதிபரால் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பெயரில் முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த விஷேட பொலிஸ் அணியினரின் நடத்திய சோதனையில் தனியார் காணி ஒன்றில் 100இற்கு மேற்பட்ட 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மரக்குற்றிகள் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள்
உடனடியாக செயற்பட்டு வனவளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக
ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |