உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற சஃபாரி ஓட்டுநர்கள் குழுவை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள்
இலங்கையின் யால பிரதேசத்தில், உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற சஃபாரி ஓட்டுநர்கள் குழுவை, இரண்டு வாரங்களுக்குத் தனிமைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளங்களில் பதிவிடப்பட்ட ஒரு காணொளியின் படி, ஓட்டுநர்கள் சஃபாரி சுற்றுப் பயணத்திற்குப் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்படவில்லை என்று சபாரியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாங்கள், சஃபாரியில் இருந்து திரும்பி வந்த பின்னரே 14 நாட்களுக்குக் கட்டாய தனிமைப்படுத்தலுக்குச் செல்லுமாறு இராணுவத்தால் தாம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக சஃபாரி ஓட்டுநர்கள் முறையிட்டுள்ளனர்.
இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது.
முன்பே அறிந்திருந்தால் தாம் சுற்றுலாப் பயணிகளின் சஃபாரிக்கு செல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது தொழிலுக்கான 700 ரூபா பணம் இன்னும் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் தங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து எந்த மேலதிக கொடுப்பனவுகளும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் 14 நாள் தனிமைப்படுத்தலில் அனுப்பப்படும்போது தமது வாகனங்களுக்கான குத்தகை தவணையை எவ்வாறு செலுத்த முடியும் என்றும் யால பிரதேசத்தின் சஃபாரி வாகன ஓட்டுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.