நிலாவெளி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு உடனடி தீர்வு வேண்டும் - தமிழரசுக் கட்சி உறுப்பினர் கோரிக்கை
தனியான பிரதேச செயலகமும் பிரதேச சபையும் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் குமார் ஜெயக்குமரன் தெரிவித்துள்ளார்.
இன்று(21.10.2026) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,
திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் நீண்டகால நிர்வாகப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக, நிலாவெளியை மையமாகக் கொண்டு தனியான பிரதேச செயலகத்தையும் பிரதேச சபையையும் அமைப்பது தொடர்பாக மக்கள் முன்வைத்துவரும் கோரிக்கையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தீவிரமாகப் பரிசீலித்து, காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், அரச சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கும், பிரதேசத்தின் அபிவிருத்தியைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்கும் பொருத்தமான நிர்வாகக் கட்டமைப்பு அவசியமாகும். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதில் நிர்வாக எல்லைகளும் சேவைகளை வழங்கும் முறைகளும் தடையாக இருக்கக்கூடாது.
நிலாவெளிக்குத் தனியான பிரதேச செயலகம் ஏன் அவசியம்
தற்போது குச்சவெளி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் நிலாவெளி கிராம அலுவலர் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்திக்க முடியாத காரணத்தால், தமது பணிகளை நிறைவேற்றாமல் மீண்டும் வீடு திரும்ப வேண்டிய சூழலும் ஏற்படுவதாக மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
பொதுமக்கள் ஒரு சான்றிதழைப் பெறுவதற்கோ, தமது நிர்வாகத் தேவையை நிறைவேற்றுவதற்கோ அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிட வேண்டிய நிலைமைக்கு நடைமுறைத் தீர்வு காணப்பட வேண்டும்.
எனவே, நிலாவெளியை மையமாகக் கொண்டு தனியான பிரதேச செயலகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், மக்கள் தொகை, புவியியல் அமைவிடம், சேவைத் தேவைகள் மற்றும் நிர்வாக வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டு, உரிய தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.