இந்திய துணை தூதருக்கு செல்வம் எம்.பி அனுப்பிய அவசர கடிதம்
"மன்னார் மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் மண்ணெண்ணெய் இன்மையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்துள்ளமையால் அவர்களுக்கு உதவியை மேற்கொள்ள வேண்டுமென" இந்தியத் துணை தூதரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்தியத் துணை தூதருக்கு இன்று காலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள்
மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதார தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இரு தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு மட்டும் 78 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய்யும் முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்தொழிலில் ஈடுபடுகின்ற கடற்தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 31 ஆயிரத்து 180 லீற்றர் மண்ணெண்ணெய்யும் தேவை எனத் தெரிய வருகின்றது.

மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு தீர்வு
அரச தரவுகளின் அடிப்படையில் குறித்த அளவு எரிபொருள் தேவை என்பதை மேற்காட்டி நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த தேவையை முறையே பெற்று தமது வாழ்வாதாரத்தை எவ்விதமான தடையும் இன்றி முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை இவ் இரு மாவட்டங்களிலும் காணப்படுகின்றது.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களையும் சேர்ந்த
கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ச்சியாகப் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
எனவே மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க உதவுமாறு
கேட்டுக்கொள்கிறேன்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.