வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
அதிக அந்நிய செலாவணியை வெளியேற்றும் அதிக திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, 1,500சிசி க்கும் குறைவான இயந்திரத் திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகைகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
உள்நாட்டு வருமானவரி திணைக்கள் ஊழியர்கள் சங்கம், அரசாங்கத்திடம் இதனை வலியுறுத்தியுள்ளது.
இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள்
சங்கத்தின் செயலாளர் ஜே.டி. சந்தன, இது தொடர்பில் செய்தியாளர்களிடம் வழங்கிய தகவலில், தற்போது கணிசமான எண்ணிக்கையிலான அதிக எஞ்சின் திறன் கொண்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது நாட்டின் வெளிநாட்டு இருப்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிக இயந்திர திறன் கொண்ட வாகனத்திற்கு செலவிடப்படும் அந்நியச் செலாவணிக்கு பதிலாக சுமார் 20 முதல் 25 குறைந்த திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு மீண்டும் ஒரு அந்நியச் செலாவணி இருப்பு நெருக்கடியை எதிர்கொண்டால், வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவை என்றும் சந்தன சுட்டிக்காட்டியுள்ளார்.