வல்வை பட்டத் திருவிழா! சிவாஜிலிங்கத்தின் அவசர வேண்டுகோள்
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, கோவிட், ஒமிக்ரோன் போன்ற வைரஸ்கள் பரவிவரும் தற்கால சூழ்நிலையில் காலவரையின்றி ஒத்தி வைக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்(M.K.Shivajilingam) தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாடுகளை கூட நான் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலை நடத்த வேண்டாம் என கூறியுள்ளேன்.
அதனையும் மீறி நிகழ்வை நடத்த முற்படுவார்களாக இருந்தால் வல்வெட்டித்துறை நகரசபை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.
அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலமாக இதனை தடுக்க முற்படுவோம்.
மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி இந்தியாவுக்கொரு முகம் சர்வதேசத்துக்கொரு முகம் தென்னிலங்கைக்கொரு முகம் தமிழ் மக்களுக்கொரு முகம் என வேடங்களை மாற்ற முயல்கின்றார்களா என்ற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம். பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது என்று கூறுவார்கள்.
ஆனால் சுமந்திரன் போன்றவர்களின் நடவடிக்கையைப் பார்த்தால் தொட்டிலை ஆட்டிக் கொண்டு பிள்ளையைக் கிள்ளுகிறார்கள் என்று சொல்லக் கூடிய நிலைமை தான் இருக்கிறது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்த கருத்து மிகவும் வேடிக்கையானது.
13ஆம் திருத்தம் பயனில்லை என்று கூறுகின்றார்.இருக்கக் கூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த கோருவது தவறல்லவே.
அரசியலமைப்பைப் போற்றி பாதுகாப்போம் என்று கூறுபவர்கள் இதனை நிறைவேற்ற வேண்டும். தமிழரசுக்கட்சி பொதுசன வாக்கெடுப்புக்கு ஏன் தயங்குகிறது. இலங்கை அரசுக்கு நோகக்கூடாது என்று அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் ஒரு பகுதியினர் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
சுமந்திரனது இல்லத்தில் தயாரிக்கப்பட்ட வரைபை, இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரிக்கின்றது. இரண்டிலும் சுமந்திரன் நின்று கொண்டிருக்கிறார்.
இதனைத் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய குழப்பங்களைத் தீர்க்க வேண்டியது தமிழரசுக் கட்சியின் கடமை. வரைபைத் தயாரிக்கும் குழுவில் சுமந்திரன் இருந்து கொண்டு அதை அவரது கட்சியே நிராகரிக்கின்றது என்றால் இதன் அர்த்தம் என்ன ? தமிழரசுக்கட்சி அந்நியப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டு இருக்கின்றது. 13ஜ அமுல் செய்யுங்கள்.
ஆனால் அது நிரந்தரத் தீர்வுமல்ல. தமிழ்மக்கள்
மத்தியில் பொதுசன வாக்கெடுப்பை நடத்தி அவர்களே தங்கள் தலைவிதியைத்
தீர்மானிப்பதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan