மன்னார் நகரின் அபிவிருத்தி பணி: நகர முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை
மன்னார் நகரசபை பிரிவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வளப்பற்றாக்குறை காணப்படுவதாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.
எனவே மன்னார் நகரசபைக்கு தேவையான வளங்களை பெற்றுக் கொள்ள மத்திய அரசு உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் நகரசபையில் இன்றைய தினம் (27) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அபிவிருத்தி பணிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகர மக்களின் நலன் கருதியும், நகரின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பதும் முதற்கட்ட பணியாக அமையும். மன்னார் நகரில் கழிவுகளை அகற்றுதல், வடிகான்களை அமைத்தல், உள்ளக வீதிகளை அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்களை முதல் கட்டமாக முன்னெடுக்க உள்ளோம்.
கடமையை பொறுப்பேற்று நான்கு நாட்களில் பல்வேறு பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளேன். மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மன்னார் பொது விளையாட்டு மைதானம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
தற்போது குறித்த மைதானம் சீர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நகர சபைக்குச் சொந்தமான உள்ளக வீதிகள் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உள்ளோம். வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற கிராமங்களுக்கான வடிகால் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
பழுதடைந்த வீதிகள்
பழுதடைந்த நிலையில் உள்ள உள்ளக வீதிகள் சீர் செய்யப்பட உள்ளது. தரவன் கோட்டை, கீரி வரையிலான பாதை பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. அந்த பாதையை சீர் செய்ய 55 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாதைக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் காணப்படும் நிலப்பரப்பில் உல்லாசப் பயணிகளை ஈர்ப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டத்திற்கு 16 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் நகரசபைக்கான வளங்கள் பற்றாக்குறையாக உள்ளது.
ஜே.சி.பி., உழவு இயந்திரம், ஏனைய வாகனங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கிறேன். பின்தங்கிய மாவட்டமாக உள்ள மன்னார் நகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசின் உதவி எமக்கு தேவை.
வாகன பற்றாக்குறை
மன்னார் நகரசபையில் ஏற்பட்டுள்ள வாகன பற்றாக்குறையை எமது அமைச்சின் ஊடாக நிவர்த்தி செய்து தர வேண்டும். மக்களுக்கான அபிவிருத்தி பணியை முன்னெடுக்க நாங்கள் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.
இந்த மண்ணில் நாசகார செயற்பாடுகள் இடம் பெறவும் நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. கனிய மணல் அகழ்வு காற்றாலை மின் உற்பத்தி போன்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
மன்னார் நகரத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மேலும் மன்னார் நகரில் அகழ்வு செய்யப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கான இடம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை எழுந்துள்ளது.
குறித்த பிரச்சினை குறித்தும் மாற்று வேலைத்திட்டங்கள் குறித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




