ஜனாதிபதி அனுரவிடம் ஜே.ஆரை புகழ்ந்து பாராட்டிய ஜப்பான் பிரதமர்
ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தனரை புகழ்ந்து பாராட்டி கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்பொழுது ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பான் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன் போது 1951 ஆம் ஆண்டு சென் பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில் ஜே.ஆர். ஜயவர்த்தன ஆற்றிய உரை தொடர்பிலும் உலகப் போரின் பின்னர் ஜப்பானின் வளர்ச்சியில் இலங்கையின் வரலாற்று ரீதியான வகிபாகம் தொடர்பிலும் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
குரோதத்தினால் குரோதத்தை வெல்ல முடியாது எனவும் பௌத்த தர்மத்திற்கு அமைய அன்பு செலுத்த வேண்டும் எனவும் அந்த சமாதான மாநாட்டில் ஜே.ஆர் ஜயவர்த்தன குறிப்பிட்டு இருந்தார்.
ஜயவர்த்தனவின் இந்த கருத்து ஜப்பானின் போருக்கு பிந்திய காலத்தின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என அவர் பாராட்டியுள்ளார்.
இலங்கையின் அப்போதைய பங்களிப்புகள் ஜப்பானின் இன்றைய சுபீட்சத்திற்கான ஓர் காரணியாக அமையப்பெற்றது என்று ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனர்த்த நிலைமைகள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆளில்லா விமானங்களை வழங்க உள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உறுதியளித்துள்ளார்.



