ஜனாதிபதி தொடர்பில் கொழும்பு பேராயர் உயர் நீதிமன்றத்தில் விடுத்துள்ள கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கட்டாயமாக விடுவிக்க முடியாது என உயர் நீதிமன்றில் இன்று எழுத்துமூல சமர்ப்பணங்களை சமர்பித்து கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 8வது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஜனாதிபதி
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, பிரதமராக பதவி வகித்த்தார். இதன்போது, அவர், அடிப்படை உரிமைகளை மீறிய தவறுகளுக்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவில் 8வது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அரசியல் அமைப்பின் 35வது சரத்துக்கு அமைய, ஜனாதிபதியின் செயல்கள் மற்றும் புறக்கணிப்புகளை ஆராய உயர் நீதிமன்றம் தனது அடிப்படை உரிமைகள் அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியும்.
இது 19ஆம் மற்றும் 20ஆம் அரசியல் அமைப்பு திருத்தங்கள் மூலம்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான, அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான
விசாரணைகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுவிப்பது என்பது, மனித
உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தின் 7 மற்றும் 8 ஆவது சரத்துக்களுக்கு
நேரடியாக முரணானது என கொழும்பு பேராயர் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.