சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அமைச்சர்கள் மீண்டும் கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்குத் தீர்வு காணச் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனக் கோரியுள்ளனர்.
ஏற்கனவே இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்துள்ள காரணத்தினால், கடன் பெற்றுக் கொள்வது பிரச்சினையாகாது என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி அந்நிய செலாவணி பிரச்சினைக்குத் தீர்வு காணச் சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக் கொள்ளவும், நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் இன்றைய தினம் நடைபெறும் பொருளாதாரச் சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.




