குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலையை இடமாற்றுமாறு கோரிக்கை
கிளிநொச்சி - அக்கராயன் பிரதேசத்தில் பொதுமக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலையை இடமாற்றுமாறு அப்பிரதேச பொதுமக்கள், பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் (21-05-2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - அக்கராயன் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் முறையான அனுமதிகள் இன்றி, பொருத்தமற்ற இடத்தில் மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அசௌகரியங்கள்
குறித்த மதுபானசாலையைப் பொருத்தமான இடத்துக்கு மாற்றம் செய்து கொள்ளுமாறு பிரதேச பொது அமைப்புகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்கராயன் பகுதியில் அமைந்திருக்கின்ற மதுபானசாலையானது பாடசாலை மற்றும் தேவாலயம் ஆகியவற்றிற்கு அன்மித்த பகுதியில் அமைந்துள்ளது.
இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு அமையப்பெற்ற மதுபானசாலையை இடமாற்றுமாறு கோரி, பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை மதுவரித் திணைக்களம் உள்ளிட்டவற்றுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



