பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்பான 'கொன்ககாஃப்' தலைவர் விக்டர் மொன்டாக்லியானி கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் பங்குகளை விற்பனை செய்ய இன்ஃபான்டினோ மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் யுவேஃபா, ஆசியாவின் ஏ.எஃப்.சி மற்றும் கொன்ககாஃப் ஆகிய மூன்று முக்கிய கூட்டமைப்புகளும் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், டொமினிகன் குடியரசில் நடைபெறும் கரீபியன் கால்பந்து ஒன்றியத்தின் (CFU) 14 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் இன்ஃபான்டினோ பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.
நிர்வாக நெருக்கடி
எனினும், பிஃபாவைச் சூழ்ந்துள்ள தற்போதைய நிர்வாக நெருக்கடி காரணமாக அவரது வருகை ஊடகங்களின் கவனத்தை திசைதிருப்பி, சிறுவர் விளையாட்டுப் போட்டியின் தொழில்நுட்ப நோக்கம் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு, கொன்ககாஃப் தலைவர் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிஃபா தலைவராக 2031 ஆம் ஆண்டு வரை நான்காவது முறையும் நீடிக்க இன்ஃபான்டினோ முயற்சித்துவரும் போதிலும், பல சர்வதேச கால்பந்து சங்கங்களும் முக்கிய அதிகாரிகளும் அவருக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.