அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை
மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணய மதிப்பில் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வங்கி முறையை,(Forex) மீண்டும் அறிமுகப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள், இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் தேய்மானத்தின் காரணமாக, தற்போதைய முறையில் நட்டம் அதிகம் என்பதால், நட்டத்தை குறைத்துக்கொள்ள பழைய முறை மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும்.
அந்த முறை அறிமுகப்படுத்தப்படாவிட்டால், இறக்குமதி அளவைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
"பரிவர்த்தனை முன்பதிவு வசதி" என அழைக்கப்படும் அமைப்பு மூன்று மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் அகற்றப்பட்டதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னைய அமைப்பின் கீழ், வர்த்தக வங்கிகள் நாணயத்தின் ஏற்ற இறக்கத்தை மதிப்பீடு செய்ய முடிந்தது, இதன் மூலம் வர்த்தகர்கள் தங்கள் இறக்குமதியை நட்டம் ஏற்படாத வகையில் திட்டமிட்டு வந்தனர்.
இருப்பினும், அத்தகைய அமைப்பு இல்லாத நிலையில், வர்த்தகர்கள் இறக்குமதியில் நட்டங்களை எதிர்கொள்ள தயங்குகின்றனர்.
இதற்கிடையில், இறக்குமதியாளர்கள் தொடர்பான சில பிரச்சனைகள் அடுத்த வாரம்
நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர்
பந்துல குணவர்தன தெரிவித்தார்.