புட்டினின் உடல்நலக்குறைவு பற்றிய அறிக்கைகள் போலியானவை - சிஐஏயின் தலைவர் கருத்து
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலையற்றவராகவோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவோ உளவுத்துறை தகவல்கள் எதுவும் இல்லை என்று அமெரிக்க புலனாய்வுத்துறையான சிஐஏயின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவு அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன.
எனினும் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என சிஐஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
புடினின் உடல் நலக்குறைவு தொடர்பான தகவல்
கிரெம்ளினும், புட்டினின் உடல்நலக்குறைவு பற்றிய அறிக்கைகள் போலியானது என நிராகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு அதிக தொலைதூர ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்ததை அடுத்து புடினின் உடல் நலக்குறைவு தொடர்பான தகவல் வெளியானது.
இதன்படி, மாஸ்கோவில் தூதுவராக பணியாற்றிய வில்லியன் பேர்ன்ஸ் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ரஷ்ய ஜனாதிபதியின் நகர்வை கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 2014 இல் வில்லியம் பேர்ன்ஸ் மொஸ்கோவுக்கான தூதராக பணியாற்றினார்.
கீய்வைக் கைப்பற்றுவது தொடர்பான தகவல்
இந்தநிலையில் உக்ரைன் ஒரு உண்மையான நாடு அல்ல என்று புட்டின் தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாகச் கூறுவதை தாம் கேள்விப்பட்டுள்ளோம் என பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இதுவரை 15000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 45000 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்கா மதிப்பிட்டுள்ளதாக பேர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய மொழி பேசுபவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானதாகவும் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறி கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது.
இதனை தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு ரஷ்யா உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.
ஆனால் கீய்வைக் கைப்பற்றுவது தோல்வியடைந்துள்ளது. இதேவேளை உக்ரைனின் சில பகுதிகளை இணைக்க ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.